×

ஒருசார்பான நடவடிக்கையால் தூத்துக்குடி சிஎஸ்ஐ டயோசிஸ் பிஷப் சஸ்பெண்ட்: பிஷப் கூட்டு கூட்டத்தில் அதிரடி

சென்னை: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுவை ஆகிய 6 மாநிலங்களில் உள்ள சிஎஸ்ஐ சர்சுகளின் தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த  மாநிலங்களில் 23 டயோசிஸ்கள் உள்ளன. அதோடு யாழ்ப்பாணத்தில் உள்ள டயோசிசும் இந்த ஒருங்கிணைப்பில் உள்ளன. ஒவ்வொரு டயோசிசுக்கும் ஒருவர் பிஷப்பாக இருப்பார். 24 டயோசிஸ்களுக்கும் சேர்ந்து தலைவராக இருப்பவரை மாடரேட் என்று அழைப்பார்கள். அதில், தூத்துக்குடி டயோசிஸில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கி தேர்தல் நடந்தது.

ஆரம்ப கட்ட தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக நீதிமன்றம் காலை 7 மணிக்கு மேல்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் சில குருமார்கள் அதிகாலை 4 மணிக்கே தேர்தல் நடத்தி முடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. போலீசிலும் புகார் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத் தேர்தல் அக்டோபர் 20ம் தேதி நாசரேத்தில் நடந்தது. இந்த தேர்தலை பிஷப் தேவசகாயம் நடத்தினார். தேர்தலில் டிஎஸ்எப் அணியும், எஸ்டிகே ராஜன் அணியும் மோதின. அதில், லே செயலாளர் வேட்பாளராக நீகர் பிரின்ஸ் கிப்ட்சனும், ஜெபச்சந்திரனும் மோதினர். பொருளாளர் பதவிக்கு டிஎஸ்எப் அணி சார்பில் மோகன்ராஜ் அருமை நாயகமும், எஸ்டிகே ராஜன் அணியில் மோசஸ் பெராஜூம் போட்டியிட்டனர்.

அதில் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஜெபச்சந்திரன் அணி தோல்வி அடைந்தது. அப்போது, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ஜெபச்சந்திரன் அணி புகார் செய்தது. இதனால், நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் அணியின் வெற்றியை அறிவித்த பிஷப் தேவசகாயம், பின்னர் அவர்களை பதவி ஏற்க விடாமல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. அதேநேரத்தில் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் அணி, டயோசிஸ் மாடரேட்டர் தர்மராஜ் ரசலத்திடம் புகார் செய்தனர்.

இதுகுறித்து சிஎஸ்ஐ திருமண்டல நீதிமன்றத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் பிஷப் தேவசகாயத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் விசாரணைக்கு தொடர்ந்து வராததால், பிஷப் தேவசகாயத்தை சஸ்பெண்ட் செய்து மாடரேட்டர் தர்மராஜ் ரசலம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுரை-ராமநாதபுரம் பிஷப் ஜோசப், உடனடியாக தூத்துக்குடி பிஷப் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி பிஷப்பாக ஜோசப், நேற்று உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


Tags : Thoothukudi ,CSI Diocese , Thoothukudi CSI diocese bishop suspended for unilateral action: Bishop takes action at joint meeting
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...